திருச்சியில் FIST முகாம் 2017 – எனது கண்ணோட்டம்

திருச்சியில் FIST முகாம் 2017 – எனது கண்ணோட்டம்

Published by Arun Isaac on

In other languages: English

Tags: கட்டற்ற_மென்பொருள், fsftn, திருச்சி

ஆகஸ்ட் 12 யிலிருந்து 15 வரை தமிழ்நாட்டுக் கட்டற்ற மென்பொருள் இயக்கமும் திருச்சி கட்டற்ற அறிவியல் தொழில்நுட்ப இயக்கமும் திருச்சியில் நடத்திய முகாமிற்குச் சென்றிருந்தேன். அங்கு என் அனுபவத்தைப் பற்றி இது ஒரு இடுகை.

என் முனைவர் பட்டப் படிப்பில் Comprehensive Exam எனப்படும் முக்கியமான தேர்வு சில வாரங்களுக்கு முன்பு தான் முடிந்தது. என் அன்றாட ஆய்வுப்பணியிலிருந்து ஒரு சிறிய விடுமுறை எடுக்கவும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தை ஆதரிக்கவும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை திருச்சி கட்டற்ற அறிவியல் தொழில்நுட்ப இயக்கமும் (Freedom in Science and Technology – FIST) தமிழ் நாட்டுக் கட்டற்ற மென்பொருள் இயக்கமும் (Free Software Foundation Tamil Nadu – FSFTN) திருச்சி TRP பொறியியல் கல்லூரியில் நடத்திய முகாமிற்குச் சென்றேன்.

குழு ஒளிப்படம் -- சிலர் முன்னே அமர்ந்துள்ளனர், சிலர் அவர்கள் பின்னே நிற்கின்றனர்.

Figure 1: FIST திருச்சி முகாம் 2017யில் குழு ஒளிப்படம்

ஒரு ஆண்டிற்கு முன்பு சென்ற திருச்சி முகாமில் FIST மக்களை முதன்முறையாகச் சந்தித்தேன். கடந்த ஒரு ஆண்டில் அவர்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். 2016 முகாமில் பேசுவதற்கே தயங்கியவர்கள் இம்முகாமை பெரிய உதவி எதுவும் இல்லாமலே முன் நின்று நடத்தினர். முகாமில் நிகழ்பெற்ற பயிலரங்கம் பொருட்களின் இணையம் பற்றினதென்றாலும், வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் பேசாமல் அதன் சமுதாய தாக்கங்களையும் விவாதித்தோம். பயிலரங்க பயிற்றுவிப்பாளர்கள் முகிலனும் நிரஞ்சனும் நுண்கட்டுப்படுத்தி நிரலாக்க நுணுக்கங்களுக்குள் போகாமல் நிரலைப் பதிவேற்றவது, வலையை அமைப்பது, உணரிகளிலிருந்து வரும் தரவைச் சித்தரித்து விளக்குவது என்று மாணவர்களுக்கு ஒரு மேல்நிலை கண்ணோட்டத்தை மட்டுமே அளித்தனர். தான் செய்யும் வேலையின் நோக்கத்தில் தெளிவாக இருந்தால், தொழில் நுட்ப விவரங்களைத் தெரிந்து கொள்வதிற்குச் சிறிதளவு சுயமுயற்சி போதும் என்பதே இந்த தத்துவம். மேலும், தொழில்நுட்ப வகுப்புகளுக்கிடையே பல விளையாட்டுகளும் சமுதாய பிரச்சனைகள் பற்றின கலந்துரையாடல்களும் இருந்தன. இதனால் மாணவர்கள் சோர்வடையாமல் தேவையில்லாத மன உளைச்சலும் இல்லாமல் தொழில்நுட்பத்தைக் கற்கவும் பரந்தப் பொது அறிவைப் பெறவும் முடிந்தது.

இந்திய கல்வி முறை பற்றின புலம்பல்

பொதுவாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களையும் மாணவிகளையும் பேசிப் பழக அனுமதிப்பதில்லை. அவர்களை அவர்கள் மனத்திற்குள் சிறையில் அடைத்துப் பிற பாலினரிடம் நட்புக் கொள்வதில் குற்ற உணர்வை உருவாக்குகின்றனர். தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கத்தினால் கல்வியை வணிகமாகவே பார்க்கின்றனர். தேவைக்கு அதிகமான விதிமுறைகளையும் கட்டுகளையும் இட்டு மாணவர்களின் கல்வியாற்றலுக்கு அணைப் போடுகின்றனர். கல்லூரி ஆட்சியாளர்களுக்கு மாணவர்கள் தேர்வு மதிப்பெண்கள் பணியமர்த்தம் என்று புள்ளிவிவரங்களே. ஆகமொத்தம், நம் கல்வி முறை கரும்பை அறைத்து அதன் சாரை உரிந்து சக்கையைத் துப்பும் பொறி போன்று மாணவர்களின் இயல்பான ஆர்வத்தையும் பகுத்தறிவையும் ஒரு சொட்டு விடாமல் உரிந்தெடுத்து அவர்களைத் தொழிற்சாலைகளில் கேள்வி கேட்காமல் வேலை செய்வதிற்கேற்ற அடிமைகளாக மாற்றுகின்றது.

கணினியியல் அல்லாத பிற மாணவர்கள்

இம்முகாமில் குடிமுறைப் பொறியியல், இயந்திரவியல், வர்த்தகம் ஆகிய கணினியியல் அல்லாத படிப்புகளிலுமிருந்து சில மாணவர்கள் பங்கேற்றனர். நிரலாளர்கள் மட்டுமல்லாமல் பிறரும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் பங்கேற்பதற்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறேன். கர்நாடக கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Movement Karnataka – FSMK) இதைப் பார்த்துக் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்.

GnuCash கணக்குப்பதிவு

இம்முகாமிற்கான செலவு அட்டவணைச்செயலி ஒன்றில் பதிவுச் செய்யப்பட்டது. இது மிகவும் குழப்பமான முறை. இதற்கு பதிலாக GnuCash போன்ற கணக்குப்பதிவு மென்பொருளைப் பயன்படுத்தினால் எளிமையாக இருக்கும். இதற்காக FIST யில்லுள்ள ஒருவருக்கு இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறையையும் GnuCash யையும் அறிமுகப்படுத்திவைத்தேன். அவர்கள் இனி மேல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு GnuCash பயன்படுத்துவார் என்று நம்புகிறேன்.

உணவும் தங்குவதற்கு இடமும்

முகாமின் கால அளவிற்குச் சமயபுரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தங்கினோம். முகாமிற்கு வருவதற்கு முன்பு குளியலறை வசதி சரியாக இருக்காதோவென்று கவலையுற்றிருந்தேன். ஆனால் நான் எதிர்ப்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது – நான்கு நாட்களை ஓட்டும் அளிவிற்குப் போதுமானதாக இருந்தது. முகாமில் வழங்கப்பட்ட உணவு நாக்குக்கு ருசியாகவும் வயிறு நிரம்பவும் இருந்தது.

ஒரே ஒரு குறை: சுற்றுப்புற நலன் கருதி சாப்பிடுவதற்காக கொடுத்த polystyrene (அதாவது thermocol) தட்டையும் முதல் நாள் கொடுத்த நெகிழி நீர் புட்டிகளையும் (plastic water bottles) தவிர்த்திருக்கலாம். polystyrene தட்டுகளுக்குப் பதிலாக தாளோ அல்லது பிற மக்கும் பொருளால் செய்த தட்டுகளைப் பயன்படுத்தியிருக்கலாம். நீர் புட்டிகளுக்குப் பதிலாக அனைவருக்கும் பொதுவாக ஒரு பாத்திரத்தில் நீர் வைத்திருக்கலாம்.

உணவகத்தில் சுமார் 20 பேர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்ணுகின்றனர்

Figure 2: FIST திருச்சி முகாம் 2017யில் மதிய உணவு

WiFi வழிச்செயலி

முகாம் அமைப்பாளர்கள் ஏதோ குழப்பத்தில் WiFi வழிச்செயலிகளுக்குப் பதிலாக ADSL இணக்கி + WiFi வழிச்செயலிகளைத் தவறாகக் கொண்டுவந்தனர். நல்ல வேளை நான் ஒரு iball Baton ib-WRB150N WiFi வழிச்செயலியைக் கொண்டுவந்திருந்தேன். அதைக் கொண்டு பயிலரங்கத்திற்குத் தேவையான வலையை அமைத்தேன். தோராயமாக 30 இணைப்புகள் இருந்தன. எனினும், அதிசயமாக, அது எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்தது. பொதுவாக, 10 இணைப்புகளுக்கு மேலாக WiFi வழிச்செயலிகள் சரியாக வேலை செய்வதில்லை. இது ஏன் என்றோ நாங்கள் பயன்படுத்திய iball வழிச்செயலி ஏன் நன்றாக வேலை செய்ததென்றோ தெரியவில்லை. மேலும் ஆராய வேண்டும்.

கணேஷ், முகிலன் மற்றும் நிரஞ்சனுடன் பேச்சு

நான்கு நாட்களில் பெரும்பான்மையான நேரம் கணேஷுடனும் முகிலனுடனும் நிரஞ்சனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் வெவ்வேறு திட்டங்கள் விரும்பிய அளவிற்கு வேகமாகப் போகாததால் அனைவரிடமும் ஒரு மன உலைவு தெரிந்தது. ஆனால் வேலை மெதுவாக முன்னேற முன்னேற இந்நிலை மாறுமென்று நம்புவோம். எங்கள் திட்டங்கள் எதுவாகவிருந்தாலும் அவற்றைத் திருந்தச் செய்து வலையில் பதிவுச் செய்வதின் இன்றியமையாமையில் உடன்பாடு கொண்டோம். அடக்கம் என்ற பெயரில் செய்வதை எவரிடமும் சொல்லாமல் இருத்தலில் பயனில்லை.

திருச்சி போக்குவரத்தும் பருவநிலையும் மக்களும் பனிக்குழையும்

பெங்களூரில் வாழ்ந்து BMTC பேருந்துகளில் சிறிய பயணங்களுக்கும் 15 அல்லது 20 ரூபாய் கொடுத்துப் பழகி திருச்சி பேருந்துகளிலும் கை தானாக 100 ரூபாய் தாளைத் தேடுகிறது. பிறகு தான் நினைவு வருகிறது தமிழ் நாட்டில் பேருந்து வசதி மிக மலிவானதென்று! பேருந்துகள் சற்று பழுந்தடைந்து மாட்டு வண்டி போல் ஆடி அசைந்து சென்றாலும், ஏற்பான விலையில் பொதுப் போக்குவரத்து இருப்பது பாராட்டத்தக்கதொன்று.

பருவமழையினால் திருச்சியில் வெப்பநிலை குறைவாகவே இருந்தது. எனினும் பெங்களூரின் குளிருக்குப் பிறகு திருச்சியின் வெயில் இதமாகவும் இருந்தது.

மாநகர்களில் கஞ்சத்தனமான கடைகளில் இறைச்சியே இல்லாத chicken puffs யைத் தின்று தின்று சமயபுர chicken puffs யில் இறைச்சி இருப்பது கண்டு என்ன மகிழ்ச்சி!

வெளிமாநிலங்களில் நீண்ட நாள் இருந்த பின் தமிழ் நாட்டிற்கு வந்து எல்லோரும் தமிழ் பேசுவதைக் கேட்பது எப்போதும் செவிக்கு இனிமையான அனுபவமே. சமயபுர மக்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது. கடைக்காரர்கள் கூட மிகவும் பாசமாக நடந்துக் கொண்டனர். ஒரு முறை ஒரு தள்ளுவண்டி கடையில் நீர் கெண்டியைப் பார்த்துவிட்டு வேறு இடத்தில் குடிக்கலாம் என்றெண்ணி குடிக்காமல் அதைத் திருப்பி வைத்து விட்டேன். அதைக் கவனித்த கடைக்கார அம்மா ஒருவர் உடனடியாக ஓடி வந்து நீரில் தூசு ஏதேனும் உள்ளதா என்று கேட்டு நான் பதில் சொல்வதற்குள் அக்கெண்டியை கழுவி புதிதாக நீர் நிரப்பிக் கொண்டுவந்தார். நகரங்களில் நான் நீர் அருந்தாதைக் கண்டுக்கொண்டிருக்கக் கூட மாட்டார்கள். சிற்றூர் மக்களின் விருந்தோம்பல் பண்பாடு என்னை வியக்கவைக்கிறது.

முகாம் நிறைவடைந்த பின் பெங்களூரு திரும்புவதற்கு முன், முகாம் அமைப்பாளர்களுடன் Michael and Sons யில் பனிக்குழை உண்டு மகிழ்ந்தேன். அக்கடையில் அவர்களே பனிக்குழை செய்கின்றனர் – அட்டைப் பெட்டிகளில் வரும் பனிக்குழையை வெளியிலிருந்து வாங்கி விற்பதில்லை. அதை உண்ணும் போது என் அம்மா நான் தொடக்கப் பள்ளியில் இருக்கும் போது வீட்டில் அவர்களே செய்த பனிக்குழை நினைவிற்கு வந்தது.

7 பேர் சிறியதோர் மேசையில் அமர்ந்து பனிக்களி உண்டு மகிழ்கின்றனர்

Figure 3: FIST திருச்சி முகாம் 2017யின் இறுதி நாள் அன்று Michael and Sons யில் பனிக்குழை

Image Credits

  1. FIST Tiruchi camp 2017 group photo by Freedom in Science and Technology (FIST), released under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International license
  2. FIST Tiruchi camp 2017 lunch by Freedom in Science and Technology (FIST), released under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International license
  3. FIST Tiruchi camp 2017 Michael and Sons by Freedom in Science and Technology (FIST), released under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International license